January 2007
Monthly Archive
Monthly Archive
Posted by mugunth on 08 Jan 2007 | Tagged as: பொது
கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து பெங்களூர் வரை சதாப்தி ரயில் வண்டியில் வரும் வாய்ப்புகிடைத்தது. நான் எதிர்பார்த்ததை விட சதாப்தி ரயில் சேவை சிறப்பாக இருந்தது. அதைப்பற்றிய என் எண்ணங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று ஆவல் அப்போதே எழுந்தது.
நான் பயனம் செய்த சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு வண்டி சரியாக ஐந்தரை மணிக்குப்புறப்பட்டது. முதலில் ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும், கன்னடத்திலிரும் அழகாக தென்னக ரயில்வே சார்பாக பயணிகளை வரவேற்றார்கள். பெங்களூர் அடைய எந்தனை கிலோமீட்டர் தூரம் உள்ளது முதல், பயனிகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரியின் பெயர் வரை அறிவித்தார்கள்(விமானங்களில் உள்ளது போல்). குறிப்பாக ஹிந்திமொழியில் அறிவிப்பு இல்லை என்பதுதான் ஆச்சர்யமான விசயம்.
மேலும் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். வண்டி 5:30 க்கு புறப்பட்டது. 6 மணிக்கு சாக்லெட் மற்றும் சமோசா கொடுத்தார்கள். கூடவே ஒரு தண்ணீர் பாட்டிலும்(இது தெரியாமல் ரயில் புறப்படுவதற்கு முன்தான் ஒரு பாட்டில் வாங்கிவந்தேன்
) கொடுத்தார்கள்.சற்று நேரத்தில் காபி மற்றும் தேனீர் வந்தது. பிறகு 7 மணி வாக்கில் தக்காளி சூப் கொடுத்தார்கள். பிறகு 7:30 க்கு இரவு உணவு.
நான் பயணச்சீட்டு வாங்கும்போது அசைவ உணவு வேண்டும் என்று கேட்டிருந்தேன். ஆனால் அனைவருக்கும் சைவ உணவுதான் கிடைத்தது. இருந்தாலும் சைவ உணவின் தரம் சிறப்பாகவே இருந்தது.
சுத்தத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், மற்ற ரயில்களைக் காட்டிலும் இந்த ரயில் சற்று சுத்தமாகவே இருந்தது என்றாலும், இந்த விசயத்தில் ரயில்வேத் துறை கொஞ்சம் அதிக கவனம் காட்டவேண்டும். உதாரணத்திற்கு ஒரு கரப்பான் பூச்சி என் இருக்கை அருகே ஓடியதைப் பார்த்தேன்.
இந்தியாவில் அரசு துறையிலிருக்கும் ஆட்களைவைத்து சுத்தம் செய்வது கடினம் தான். அதற்கு மாற்றாக ரயில்வே துறை சுத்தப்படுத்தும் வேலைகளை வேறு ஒரு தனியார் நிறுவணத்திடம் ஒப்படைத்துவிடுவது பற்றி சிந்திக்கவேண்டும். இன்னும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நாம் பிரயாணம் செய்ய முடியும் நிலை வரவேண்டும்.
வண்டி சுமார் 10:30 க்கு பெங்களூர் வந்து சேர்ந்தது. மாலை 5:30 க்கு சென்னையில் புறப்படும் இந்த விரைவு ரயில் வண்டியில்,
பெங்களூர் வரைக்கான கட்டணம் இணையம் வழியாக வாங்கினால் ரூ.580. இதே வழித்தடத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் சுமார் 400 ரூபாய் என்று அறிகிறேன்.
சாப்பாடு மற்றும் குறைந்த பயண நேரம், பேருந்தில் வரும் போது ஏற்படும் உடல் சோர்வு இண்மை போன்றவற்றை கணக்கிலெடுத்தால், தனியார் பேருந்தில் சென்னை-பெங்களூர் வழிதடத்தில் செல்வதைவிட சதாப்திவிரைவு ரயிலிலேயே சென்று வருவது சிறந்தது.