வாழ்க்கை
Archived Posts from this Category
Archived Posts from this Category
Posted by mugunth on 28 Mar 2005 | Tagged as: வாழ்க்கை
இன்று இரவு 12:00 மணி இருக்கும், நான் சாப்பிட்டுவிட்டு கணி முன் உட்கார்திருந்தேன்.
நாற்காலி சற்று அசைவதைப்போல் உணர்தேன், பின் தலைசுற்றுவது போல் லேசான உணர்வு. என்னக் காரணம் என்று யோசித்தேன். பிறகு அறையின் கதவைப்பார்த்தேன், அது முன்னும் பின்னும் தானாக அசைவதைப்பார்த்தப் பின் தான் ஏதோ நடக்கிறது என்பதை உணரமுடிந்தது.
அதற்குள் என் மனைவியும் கட்டடம் அசைவதைப்போல் இருக்கிறது என்று பயத்துடன் சொல்லிக்கொண்டு வந்தார். சன்னலுக்கு வெளியே பார்த்தபோதுதான் மக்கள் வெளியேறிக்கொண்டிருப்பது தெரிந்தது. நாங்களும் அவசர அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு எங்கள் அடுக்குமாடி குடியிருப்பைவிட்டு (Danau Idaman Condominium, Tmn Danau Desa, KL ) வெளியேறினோம். 5ஆம் மாடியில் இருந்து லிப்டை தவிர்த்துவிட்டு , படி வழியாக வெளியேறும்போது எங்கள் அலுவலக நண்பர்களிடமிருந்த கைத்தொலைப்பேசி பதற்றதுடன் அழைப்புகள் வர ஆரம்பித்தது.
வெளியே அனைத்து இன மக்களும் இரவு உடைகளுடன் இருப்பதை பார்த்தோம். என் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெங்காலி தன் பனியனோடு வந்துவிட்டான். அவனை கின்டலடித்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் நேரத்தில் பக்கத்து குடியிருப்பிலிருக்கும் என் இன்னொரு அலுவலக நண்பர் வெற்றுடம்பில் துண்டைப்போர்த்துக்கொண்டு வந்தார்!
அருகிலேயே இருக்கும் காபிக்கடையில் பெரியத்திரையில் CNN டிவிச் சானலைப் காட்ட ஆரம்பித்தனர். அதில் சுமத்திராவில் மறுபடியும் ரிட்சர் 8.2 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்தோம்.
சுமார் 2 மணி நேரம் வெளியே , கதைத்துக்கொண்டும், CNN பார்த்துக்கொண்டும், மக்கள் கூட்டத்தோடு ரோட்டில் கழித்தப்பிறகு, எங்களை அவரவர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் உள்ளே போக அனுமதித்தார்கள். இப்போது மணி அதிகாலை 2:48 . இனி எங்கே தூங்குவது. அதான் கணினி முன் உட்கார்ந்து வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன்……
Posted by mugunth on 24 Nov 2004 | Tagged as: வாழ்க்கை
நேற்று தமிழ்வழிக் கல்வியின் நடைமுறை பயன் பற்றிய ஒரு கருத்து என் சீன ஆசிரியையிடமிருந்து வந்தது! எப்படி என்று கேட்கிறீர்களா.
மேலும் படிங்க ….
அன்மைகாலமாக நான் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். வாரத்தில் இரண்டு நாள் வகுப்புகள். வகுப்பு ஆரம்பிக்கும் போது என்னுடன் சேர்ந்து ஐந்து பேர் இருந்தார்கள். எல்லோரும் மலேசிய ரைஸ்குழுவைச் சார்தவர்கள். சீனம் பேசாதவர்களுக்காக ஒரு சீன வகுப்பு வேண்டும் என்று நாங்கள் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அதன் விளைவாக இன்னொரு ரைஸ் உறுப்பினரால் ஒரு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது 3 மாத்ததிற்கு முன். இப்போது ஒவ்வொருவராக விலகி தற்போது நான் மற்றும் நியூசிலாந்தைச் சார்ந்த ஒரு வெள்ளைக்கார், இரண்டு பேர்தான் வகுப்பில் இருக்கிறோம். வாரத்தில் இரண்டு நாள் வகுப்பு. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் வகுப்புக்கு முடிந்த அளவுக்கு மட்டம் போடாமல் சென்றுகொண்டிருக்கிறேன். ஆனால் சீனம் தான் என் தலையில் ஏற ரொம்பக் கஸ்டப்படுகிறது ![]()
நேற்றைய வகுப்பில் சீனத்து கணக்கு குறியீடுகளை ( கூட்டல், கழித்தல் போன்றவை) பற்றி வகுப்பு எடுத்தார் எங்கள் ஆசிரியை. அப்போது பெருக்கல் வாய்ப்பாடு பற்றி குறிப்பிடும்போது, வேகமாக சொல்லக்கூடிய முறையில் உள்ளது சீனத்தில் தான் என்றார்.
அதாவது 1 X 2 = 2 என்பதை, ஆங்கிலேயர் சொல்வதனால், one twos are two (மொத்தம் நான்கு வார்த்தைகள்) என்று சொல்ல மனதில் சொல்ல வேண்டி இருக்கும். அல்லது வேறு மாதிரி சொன்னால் கூட formula வில் உள்ள எண்களைக்காட்டிலும் ஒரு வார்த்தையையாவது அதிகமாக சேர்க்கவேண்டும். அதனால் ஒரு எண்ணைப்பெருக்க ஆங்கிலேயர் அதிக நேரம் எடுக்கவேண்டி வருமே என்றார்.
ஆனால் சீனத்தில் என்களை மட்டும்தான் குறிப்பிடுவோம் என்றார்.
அதாவது…yi er er [ yi => ஒன்று, er => இரண்டு] மூன்றே வார்த்தைகளைத்தான் மனதில் சொல்லிப்பார்ப்போம்.
அதனால் எங்களால்(சீனக் கல்வி கற்றவர்களால்) ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் பாடம் கற்றவர்களை விட வேகமாக மனதில் கணக்குப் போடமுடியும் என்று பெருமையடித்தார்.
நான் தமிழிலும் அப்படிதாங்க என்றேன். {ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நான்கு என்று மனப்பாடமாக…சிறு வயதில் 16ஆம் வாய்ப்பாடு வரை மணப்பாடம் செய்ய நான் பட்ட கஸ்டம் இன்னும் நினைவிலிருக்கிறது. இப்போதும் மனதில் கணக்கு போட வாய்ப்பாடு உதவுகிறது என்று தான் சொல்வேன் } . அவருக்கு ஆச்சரியம். மலேசிய மக்கட்தொகையில் 8% தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியைப்பற்றி மற்ற இனத்திற்கு அவ்வளவாகத் தெரியாமல் (நம்மவர்கள் தெரியவைக்காமல்) இருப்பது சற்று வருத்தம்தான்.
அவரோட கருத்துப்படி பார்த்தால் , குறைந்தபட்சம் ஆரம்ப வகுப்பு வரை் தமிழ் வழிக்கல்வி கற்ற தமிழன் கணக்கில் புலியாகத்தானே இருக்கவேண்டும்?
தமிழ்வழிக் கல்வியினால் உள்ள நன்மைகள் ஏராளமாக இருக்கறதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதில் இந்த தமிழ் வாய்ப்பாட்டின் பயனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Posted by mugunth on 17 Nov 2004 | Tagged as: வாழ்க்கை
ஐந்து நாள் விடுமுறையில் ஆசிய கண்டத்தை முதல் முறையாகக் கடந்துவிட்டு வந்திருந்தேன்.
ஆஸ்திரிலியாவின் தென் கோடியில் இருக்கும் மெல்போர்ன் நகருக்கு சென்று நேற்றுதான் திரும்பினேன்.�
நவீன கட்டடங்கள், கண்ணுக்கு எட்டியதூரம் வரை தென்படும் புல்வெளிகளில் மேய்துகொண்டிருக்கும் கால்நடைகள், கங்காருக்கள், தூங்குவதையே வாழ்க்கையாகக் கொண்ட அழகான குவாலாக்கள், பிலிப் தீவில் பார்த்த குட்டிப்பென்குவின்கள் என்று பல வகையில் ஆஸ்திரேலிய நாடு என்னை அதிசயிக்க வைத்தது.
இன்று…மீண்டும் சலிப்புத்தட்டும் செக்குமாட்டு கணினி வேலையில்் …
மனிதனின் முழு ஆற்றல் வெளிவர மாற்றம் தேவை என்பதை இப்போது நான் கண்டிப்பாக ஆமோதிப்பேன்
உலகின் தென்பாதியில் இருக்கும் அந்த அதிசய நாட்டில் பார்த்த நினைவுகள் மட்டும் இன்னும் துளிகூட நீங்கவில்லை.�
கிட்டதட்ட 100 டிஜிட்டல் படங்களாக அவற்றை பிடித்து வந்து இன்று என் அலுவலக நண்பர்களிடம் காட்டி நிணைவுகளை பகிர்ந்து கொண்டபோது மீண்டும் மெல்போர்ன் சென்று வந்தேன் என்று கூட சொல்லலாம்.
மற்றபடி இன்றுதான் 5 நாட்களுக்குப் பிறகு இந்திய செய்திகளை படிக்க நேரமும் கிடைத்தது. காஞ்சி மட தலைவர் கைதுபற்றி விரிவாகப் படித்தேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தைரியமாக நிரூபித்துக் காட்டிய தமிழக அரசுக்கு என் நன்றிகள்!
Posted by mugunth on 21 Sep 2004 | Tagged as: வாழ்க்கை
ஊரில் இருந்து மலேசியா திரும்பி கிட்டதட்ட 1 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கொண்டுவந்தப் புத்தகங்களில் இண்போசிஸ் ஃபவுண்டேசன் தலைவி சுதா மூர்த்தி எழுதிய ‘உள்ளங்கையில் உலகம்’ புத்தகமும் ஒன்று. தற்போது அதைப்படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 17ஆவது கட்டுரையாக பெற்றோர்கள் எப்படி அளவுக்கு அதிகமாக பிள்ளைகள் மேல் பாசத்தைக் காட்டி அவர்களின் சுதந்திரத்தை தடுக்கிறார்கள் என்பதை அழகாக எழுதியுள்ளார்.
அந்தக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட இந்த வரிகளை அனைத்துப் பெற்றோரும் (குறிப்பாக வயதுவந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்) படிக்கவேண்டும்.
“…சிறகு முளைத்த பிறகும் பறவையை எத்தனை நாள்தான் கூண்டிலேயே அடைத்து வைத்திருக்கமுடியும்? நம் குழந்தைகளுக்கு இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் நம்மால் கொடுக்க முடியும்: அவை ஆழமான வேரும், உறுதியான சிறகுகளும். அப்போதுதான் அவர்களால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியும்ழ வாழ்க்கையில் எந்த வசதி அவசியமானது என்று கேட்டால் பணமோ, பொருட்களோ அல்ல. சரியான வகையில் இயங்கத் தகுந்த சுதந்திரம்தான். அப்படிப்பட்ட சுதந்திரம் மனிதனுக்கு முதிர்ச்சியைத் தருகிறது. மனிதன் சரியான முடிவுகள் எடுக்க உதவுகிறது. அப்படிப் பட்ட முடிவுகள் நம்பிக்கையைத் தருகின்றன. அதுதான் உண்மையான செல்வம்… “
Posted by mugunth on 13 Sep 2004 | Tagged as: வாழ்க்கை
என் பள்ளித்தோழன் அனுப்பிய ஒரு மடலில் எங்கள் பள்ளியைப்பற்றிய ஒரு ஹிந்து நாளிதழ் செய்தியைப் பார்த்தேன். என்னுள் 14 வருடத்திற்கு முந்தைய நினைவுகளை எழுப்பியது இச்செய்தி…
நான் படித்தது சைனிக் பள்ளி யில். நான் நானாக இருக்க ஒரு முக்கியக் காரணமும் இந்தப்பள்ளிதான்…

மேலேக் காணப்படும் இந்தப்படம் எங்கள் பள்ளியின் இல்லங்களுக்கிடையே நடக்கும் விளையாட்டுப்போட்டிகளின் போது மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டை வடிவ செட்டைக்காட்டுகிறது.
இந்த கோட்டை படத்தை வெகு நாளைக்குப்பிறகுப் பார்த்தவுடன் என் நினைவுகள் 14 வருடத்திற்கு முந்தைய என் பள்ளிநாட்களுக்குச் சென்றுவிட்டது. என் பள்ளித்தோழர்களை இன்றும் தொடர்பில் வைத்திருக்க உதவிய இணைய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் _/\_
எங்கள் பள்ளியில் நடக்கும் இல்லங்களுக்கான போட்டிகள் வெகு பிரபலம். நான்கு இல்லங்கள் இருக்கும் சேரா, சோழா, பாண்டியா மற்றும் பல்லவா என்பவை இல்லங்களின் பெயர்கள். 6ஆம் வகுப்பில் சேரும் போது எந்த இல்லத்தில் சேர்கிறோமோ அதிலேயே 12 ஆம் வகுப்பு முடிந்து வெளிவரும் வரை இருப்போம்.
ஒரே இல்லத்தைச் சார்ந்தவர்கள் ஒரே கட்டடத்தில(விடுதியில்)் தங்கியிருப்போம். அனைத்துப்போட்டிகளும் (தடகளம், விளையாட்டு மற்றும் படிப்பு சம்மந்தபோட்டிகளும்) இல்லங்களுக்கு இடையில் தான் நடக்கும்.
அதைவிட எங்களுக்கு விளையாட்டு நேரத்தில் (மாலை 4:00 PM to 6:00 PM) உடுத்துவதற்கு என்று ஒரு உடை இருக்கும் (சைனிக் பள்ளியில் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு யூனிஃபார் உண்டு). அது இல்லத்துக்கு ஏற்ப ஒரு நிறத்தில் இருக்கும். நானும் என் இல்லத்தவரும் எங்களுக்கு உரிய கரு நீல உடையில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிகொண்டோ அல்லது திரிந்துகொண்டிருப்போம்.
விளையாட்டு நேரத்தில் வகுப்பறையிலோ, விடுதியிலோ அனுமதி இல்லைங்க.. கண்டிப்பாக எங்காவது போய் எதாவது விளையாடிக்கொண்டு இருக்கவேண்டும்.
<>இயற்கையாகவே சைனிக் பள்ளி மாணவர்களுக்குள் எப்போதும் தீவிர ‘இல்லப் பற்று’ நிலவும். விளையாட்டுப்போட்டிகளின் போது நாங்கள் எங்கள் இல்லத்து டீம்களை உற்சாகப்படுத்தும் போது பார்க்கவேண்டுமே….
இப்போதுகூட எங்காவது எங்கள் பள்ளி முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்தால்், அறிமுகப்படுத்தும் போதும் எந்த இல்லத்தினைச் சார்ந்தவன் [உதா: Mugunth from Chera house ] என்று அறிமுகப்படுத்துவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுகளேன்.
எங்கள் பள்ளியில் படித்த மாணவரிடையே இயற்கையாகவே காணப்படும் team mentality உருவாக உதவியது இதுதான் என்று நினைக்கிறேன்.
Posted by mugunth on 04 Jul 2004 | Tagged as: வாழ்க்கை
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மலேசியாவில் கிடைக்கும் சீன உணவு வகைகளில் ஒன்றான ஸ்டீம்போட்டை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒருவகை உணவு என்றுகூட சொல்லமுடியாது, இது உணவு உட்கொள்ளும் ஒரு வகை என்றுகூட சொல்லலாம்.
மூன்று வருடமாக மலேசியாவில் இருக்கும் நான் அன்றுதான் முதன் முதலாக அப்படி ஒன்று இருப்பதை கேள்விப்பட்டு , அனுபவித்தும் பார்த்தேன்.
இதன் சிறப்பு என்னவென்றால், நாமே வேண்டிய வகை மீன் மற்றும் மற்ற இறைச்சி வகைகளை எடுத்து சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்! இது சீனாவின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கம் என்று இணையத்தளங்களில் படித்திருக்கிறேன்்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கிரேக்க நண்பன் சீமோஸ் மற்றும் அவர் தோழி நோவமி மற்றும் பெங்களூரிலிருந்து தற்போது மலேசியா வந்திருக்கும் சுனில் என்ற திறவூற்றுச் சமூதாயத்தை சேர்ந்த நண்பரும் வெளியே சந்தித்து உணவருந்த செல்வது என்று முடிவு செய்தோம்.
அங்கு செல்வதற்கு முன்பு சீமோஸ் மற்றும் சுனில் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் காபிக்கடையில் சந்தித்து பேசிகொண்டிருந்தோம்.
சுனில் திறவூற்று சமூகவட்டத்தில் குறிப்பாக பெங்களூர் பகுதியில் மிகவும் அறியப்பட்ட நபர். அவர் மகித்தி என்ற நிறுவணத்தை நடத்தி வருகிறார். அதே போல் சீமோஸ் கிரேக்க மொழி திறவூற்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர். தற்போதைய திறவூற்று மென்பொருட்களின் நிலவரம் குறித்து கதைத்துக்கொண்டு இருந்தோம்.
சற்று நேரத்தில் சீமோஸின் தோழி நோவமியும் எங்களுடன் சேர்ந்து கொள்ள , அங்கிருந்து LRT ரயிலைப்பிடித்து கிளானாஜெயா என்ற இடத்திற்கு புறப்பட்டோம்.
அங்குள்ள ஒரு புகழ்பெற்ற உணவு விடுதியில் எங்கள் ஸ்டீம்போட் உணவை தயாரித்து உண்ண ஆரம்பித்தோம். ஒரு ஆளுக்கு 16.80 ரிங்கட் விலை. வேண்டிய அளவு மீன், முட்டை, நூடுல்ஸ் மற்றும் இறைச்சிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எடுத்த அனைத்தையும் சாப்பிட்டுவிட வேண்டும். வீணாக்கினால், 100 கிராம் மீதம் வைத்த உணவு பண்டத்திற்கு 5 ரிங்கட் அபராதமாக கட்டவேண்டும் !
மீன், தௌஃபு(சோயா மொச்சையினால் தயாரிக்கப்பட்ட ஒரு சீனத்து பண்டம்) கொஞ்சம் நூடுல்ஸ் என்று நான் தேர்தெடுக்க, மற்ற நண்பர்கள் கோழி, ஆடு என்று நிறைய எடுத்து வந்தார்கள். அனைத்தையும் டேபிலில் பொருத்தப்பட்ட அடுப்பில் வைத்து வேகவைத்து உண்ண ஆரம்பித்தோம். அங்குள்ள இறைச்சிகள் அனைத்தும் வேகவைக்க தயாராக நன்றாக marinate செய்யப்பட்டு வைத்திருந்தார்கள்.
ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டே உணவுவகைகளை வேகவைத்து சாப்பிட்டு முடிக்க ஆண 2-3 மணி நேரம் போனதே தெரியவில்லை. நண்பர்கள் குழுவாக சென்று சாப்பிட மிகவும் சிறந்த தேர்வாக அமையும் இது.
மலேசியா வரும் நண்பர்களே யாரும் ஒரு முறையாவது ஸ்டீம்போட் சாப்பாட்டை ரசிக்காமல் சென்றுவிடாதீர்…
அன்று எடுத்த சில படங்களை சீமோஸ் அனுப்பிவைத்தார். இதோ உங்கள் பார்வைக்கும்…

மலேசியாவில் ஓடும் LRT இரயிலின் தோற்றம்
(உலகிலேயே அதிக தூரம் தானியங்கியாக அதாவது ஓட்டுனர் இல்லாமல் ஓடும் LRT இது தான் என்று இங்கு சொல்வார்கள்)

ஸ்டீம்போட் உணவுத் தயாரிப்பில் மும்மரமாக…

முதல் ரவுண்ட் முடிந்து அடுத்த ரவுண்டுக்கு மீண் மற்றும் தௌஃபு வேகவைக்கப்படுகிறது…

உணவை டூரியன் பழத்தின் சுவைகொண்ட ஐஸ்கிரீமுடன் முடிவுக்குக் கொண்டுவந்தோம்…
( என் ஒருகையில் ஐஸ்கிரீம் இன்னொரு கையில் எனக்குப் பிடித்த சூடான சீனத்து தேத்தண்ணீர் கோப்பை இருப்பதை போட்டோவைப்பார்த்த பிறகுதான் கவனித்தேன்! )

என் அலுவலத்திற்கு சென்று அங்கு இருக்கும் எனது காரை எடுக்க போக இரயில் நிலையம் வந்தால் , கடைசி இரயிலும் கிளம்பி விட்டிருந்தது… டாக்ஸி பிடிக்க செல்லும் முன் இரயில் நிலையத்திலேயே ஒரு படத்தினை அனைவரும் எடுத்துக்கொண்டோம்.
[படத்தில் சீமோஸ், நோவமி(சீமோஸின் தோழி), சுனில் மற்றும் நான் ]