வேலூர் ஒரு பரிநிரல் விழா! -2
Posted by mugunth on 09 Feb 2005 at 09:56 pm | Tagged as: பொது
சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வரை (வழியில் இரண்டு இடங்களில் வண்டியை நிறுத்தி டீ அடித்துக்கொண்டும்) பரிநிரல் குறித்தும், அதன் வருங்காலம் மற்றும் தமிழகத்தில் பரிநிரல் மூலம் எத்தகைய சமூதாய மாற்றம் கொண்டுவர முடியும் என்பது குறித்தும் திரு ஆனந்தபாபு மற்றும் திரு அன்பு ஆகியோருடன் விவாதித்தது மறக்கமுடியாத அனுபவம்.
இன்றைய தேதியில் சக்திவாய்ந்த அதிவேக கணினியை(super computer) உருவாக்கவேண்டும் என்றால் அதை பரிநிரல் தொழில் நுட்பத்தைக் (free software technology) கொண்டு தான் சாதிக்க முடியும் என்று திரு அனந்தபாபு குறிப்பிட்டார்.
நாங்கள் வி.ஐ.டி ( வேலூர் தொழில் நுட்பக்கல்லூரி) சென்றடைந்தபோது சுமார் மணி 1:00 ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் மாணவர்கள் மும்முரமாக ‘ஸ்வதந்திரா’ விழாவிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
[ ‘ஸ்வதந்திரா’ விழாவிற்கான ஏற்பாடுகளில் VIT மாணவர்கள்…]ஆர்.எம்.எஸ் வரும் கார் இன்னும் வந்து சேர்திருக்கவில்லை. அவர் இணையத்தைப் பயன்படுத்த விரும்பியதால் வழியில் ஒரு இணைய மையத்திற்கு சென்றுவிட்டு சற்றுத் தாமதமாக வருவதாக கைத்தொலைப்பேசி வழியாக தெரிவிக்கப்பட்டது. சரி அவர் வரும்வரையில் காத்திருக்கலாம் என்று நாங்கள் மாணவர்களுடன் அரட்டையில் இருந்தோம். திரு ஆனந்தபாபுவை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு பரிநிரல் சித்தாந்தம் சம்பந்தமான கேள்விகளைக்கேட்டுகொண்டிருந்தார்கள்.
[ஆனந்தபாவுடன் மாணவர்கள்…]நானும் சென்னை முத்துவும் இன்னொரு பக்கம் கதைத்துக்கொண்டிருந்தோம்.
இரவு முழுதும் கண்விழித்தது நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்துகொண்டிருக்கும் மாணவர்களை பார்த்தபோது எனக்கு என் எம்.ஐ.டி கல்லூரி நாட்களின் நினைவு வந்தது.
சரியாக நள்ளிரவு 1:15 மணிக்கு ஆர்.எம்.எஸ் அவர்களின் கார் வந்து சேர்ந்தது. அவரை தரிசிக்கும் ஆர்வத்தில் அவரின் காரை சூழ்ந்துகொண்டனர். பிறகு ஆர்.எம்.எஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டது.
பிறகு நாங்கள் தங்கும் அறைகளுக்கு வி.ஐ.டி மாணரவர் இருவர் அழைத்துச்சென்றனர்.
[ஆர்.எம்.எஸ் காரை சுற்றி ஆர்வத்தில் மாணவர்கள்…]
மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணி அளவில் திரு ஆர்.எம்.எஸ் அவர்களின் உரை ஆரம்பமாது. மணி 12:30 வரை பரிநிரல் சித்தாந்தம் பற்றியும், ஏன் பரிநிரல் அறவாரியத்தை(Free Software foundation) ஆரம்பித்தார்கள் என்பது பற்றியும் விரிவான உரையை நிகழ்த்தினார்.
பிறகு கேள்வி நேரம். கேள்விகளை தாளில் எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்று அறிவித்தவுடன், மடமடவென்று கல்லூரி மாணவர்களிடமிருந்து கேள்விகள் வந்து குவிய ஆரம்பித்தது.
[உரைக்குப் பின் கேள்விகளை எதிர்நோக்கியவாறு…]அதன் பிறகு மதிய உணவு , பிறகு ஆனந்தபாபுவின் உரை மற்றும் திரு நாகார்ஜூன் அவர்களின் உரையும் இருந்தது.
அந்த உரைகளுக்கிடையே திரு அன்பு அவர்களுடன் அருகிலிருந்த கேண்டீனில் அமர்ந்து தமிழ் பரிநிரல்களை பரவலாக்குவது பற்றியும் அதற்காக வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் சற்று நேரம் பேசமுடிந்தது. தமிழகப் பரிநிரல் அறவாரியம் அமைப்பின் கீழ் அனைத்து தமிழ் பரிநிரல் செயல்பாடுகளையும் கொண்டு வரவேண்டுமென்றும் முடிவு செய்தோம்.
[ஆனந்த பாபு உரை]பிறகு 8:00 மணியளவில் மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும இரவு விருந்து அளிக்கப்பட்டது.
[இரவு விருந்தில் நான், ஆனந்தபாபு மற்றும் திரு ஆர்.எம்.எஸ்]
[மாணவர்களுடன் போஸ்கொடுக்கும் ஆர்.எம்.எஸ் ]
[தன் இசைத்திறமையையும் வெளிப்படுத்தும் ஆர்.எம்.எஸ் ]பிறகு சுமார் இரவு சுமார் 9:00� மணி அளவில் ஆர்.எம்.எஸ் மற்றும் நாங்கள் 7 பேர் ஒரே வேனில் சென்னை நோக்கி புறப்பட்டோம். ஆர்.எம்.எஸ் க்கு திங்கட்கிழமை எம்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டியில் நிகழ்ச்சி இருந்தது. நான் வழியிலேயே கிண்டியில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு இறங்கிகொண்டு இரவு 12:00 மணிவாக்கில் வீடு வந்து சேர்ந்தேன்.
வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியின் ‘ஸ்வதந்திரா’� நிகழ்ச்சியும் , ஆர்.எம்.எஸ் அவர்களின் சந்திப்பும் பரிநிரல் சித்தாந்தத்தின் மீதுள்ள என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது