நேற்று அலுவலக்த்தில் என் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் கணினி திடீரென்று படுத்துவிட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை கணினி திறக்க(boot ஆக) மறுத்தது. வேலை அதிகம் இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சோதனையை எதிர்பார்க்கவில்லை.

இதனை சரி செய்ய நினைத்து, இயங்குதளத்தின் குறுந்தட்டை எடுத்துவந்து அதிலுள்ள repair் modeஇல் இயக்கிப்பார்த்தேன். ஒன்றும் சரிபடவில்லை.

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை, வட்டிலுள்ள சொந்தக் கோப்புகளை அழிக்காமல், மீண்டும் ஒருமுறை நிறுவிப்பார்த்துவிடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் வட்டிலுள்ள கோப்புகளை அழித்துவிட்டுத்தான் மறுமுறை நிறுவ விடுவேன் என்று எக்ஸ்பி இயங்குதளம் அடம் பிடித்தது.

அலுவலகவேலையின் முக்கியக் கோப்புகளனைத்தையும் காப்பாற்றியாகவேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன்.

வன்தட்டை கழற்றி எடுத்து இன்னொரு கணினியுடன் பொருத்தி கோப்புகளை வெளியே எடுப்பது என்று சுலபமான காரியமில்லை.

என்ன செய்வது என்று யோசிக்கையில் லினக்ஸ் இயங்குதளத்தில் விண்டோஸின் வட்டுக்களை(NTFS வகையில் இருக்கும் வட்டுகளையும்) பார்வையிட முடியும் என்பது நினைவில் வந்தது.

தற்போது என்னிடம் லினக்ஸ் குறுந்தட்டுக்கள் எதுவும் அலுவலகத்தில் வைத்திருக்கவில்லை.
உடனே பக்கத்திலுள்ள தெரிந்த கணினி வன்பொருள் கடையில் ஒரு நாபிக்ஸ் லினக்ஸ் குறுந்தட்டை வாங்கிகொண்டு வந்தேன். இந்த நாபிக்ஸ் லினக்ஸை வன்தட்டில் நிறுவாமலே நம் கணினியின் குறுதட்டிலிருந்தே இயக்கலாம்.
அதாவது குறுந்தட்டை கணினியில் பொருத்தி மீளத்தொடங்கினால் உங்கள் கணினி லினக்ஸில் இயங்குவதைப் பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்ட மாதிரி என் “விண்டோஸால் கைவிடப்பட்ட” கணினியை, நாபிக்ஸ் லினக்ஸ் மூலமாக உயிர்த்தெழ செய்தேன். கணினி லினக்ஸ் மூலமாக இயங்க ஆரம்பித்தவுடன் அதனை எங்கள் அலுவலக LAN வலைக்குள் கொண்டுவந்தேன். ( IP எண்னை சரியாக மாற்றி அமைத்தானே போதும்.)
பிறகு நாபிக்ஸ் லினக்ஸில் உள்ள சம்பா வழங்கியை (samba server) முடுக்கிவிட்டேன். சம்பா வழங்கி என்பது லினக்ஸ் கணினியின் கோப்புகளை, அதே LAN வலைக்குள் உள்ள மற்ற விண்டோஸ் கணினிகள் பார்க்க வழிவகுக்கும்.

உடனே பக்கத்துக் (விண்டோஸ்) கணினிக்கு என்று என் லினக்ஸ் கணினியின் ip எண் கொண்டு திறக்கையில் , பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக்கொண்டு, லின்க்ஸ் கணினியில் உள்ள அனைத்து வட்டுக்களையும் மற்றும் கோப்புகளையும் **பழுதடைந்த விண்டாஸ் பயன்படுத்திய NTFS ்வவ வட்டு உட்பட** திறக்க முடிந்தது.
உடனே அனைத்துக்கோப்புகளையும் பாதுகாப்பாக இன்னோரு கணினியில் பிரதி எடுத்து கொள்ள முடிந்தது. பிறகு விண்டோஸ் இயங்குதளத்தை அழித்து மீண்டும் நிறுவிக்கொண்டேன்.

விண்டோஸ் காலை வாரினாலும் தக்க சமயத்தில் லின்க்ஸ் கைகொடுத்தது. வாழ்க லினக்ஸ்!

அலுவலகத்தில் விண்டோஸ் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் கையில் எதற்கும் ஒரு நாப்பிக்ஸ் போன்ற ஒரு லினக்ஸ் குறுந்தட்டு இருக்கட்டும்! ஒரு நாள் அதன் தேவை, விண்டோஸ் புண்ணியத்தில் உங்களுக்கும் வரலாம் ;)
்பிஇ